வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர் அமிதாப்பச்சன்-நடிகை கங்கனா ரணாவத் தமிழ் சினிமாவுக்கு 5 விருதுகள் இளையராஜா, நடிகர் சமுத்திரகனி ஆகியோர் விருது பெற்றனர்

தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவுக்கு 5 விருதுகள் கிடைத்தன. இளையராஜா, நடிகர் சமுத்திரகனி ஆகியோர் விருது பெற்று உள்ளனர். 

புதுடெல்லி
மத்திய அரசு ஆண்டு தோறும் திரைப்பட துறையில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
தேசிய திரைப்பட விருதுகள்2015–ம் ஆண்டுக்கான 63–வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்ய பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ரமேஷ் சிப்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து இருந்தது.
குழுவின் தலைவரான ரமேஷ் சிப்பி நேற்று டெல்லியில் திரைப்பட விருதுகளை அறிவித்தார்.
சிறந்த படம் ‘பாகுபலி’இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படமாக, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட தயாரிப்பான ‘பாகுபலி’ தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்கான (சிறப்பு சப்தம்) விருதையும் இந்த படம் பெற்று இருக்கிறது.
சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ் தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து உள்ளனர். தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
அமிதாப்பச்சன்அமிதாப்பச்சன் சிறந்த நடிகராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். ‘பிகு’ இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. 73 வயதான அமிதாப்பச்சன் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவது இது 4–வது முறை ஆகும். ஏற்கனவே ‘அக்னிபாத்’, ‘பிளாக்’, ‘பா’ ஆகிய படங்களுக்காக அவர் தேசிய விருது பெற்று உள்ளார்.
‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்று உள்ளார். 29 வயதான கங்கனா ரணாவத் தேசிய விருது பெறுவது இது 3–வது தடவை ஆகும். 2014–ம் ஆண்டில் ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும், 2008–ம் ஆண்டில் ‘பேஷன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் இவர் பெற்று இருக்கிறார்.
சிறந்த இயக்குனர்ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்த ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குனராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த படத்தில் நடித்த தன்வி ஆஸ்மி சிறந்த துணை நடிகையாகவும், இந்த படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்த ரெமோ டிசோசா சிறந்த நடன கலைஞராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்று இருக்கிறார்.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘பஜ்ரங்கி பைஜான்’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
‘விசாரணை’க்கு 3 விருதுகள்தமிழ்ப்பட துறைக்கு 5 விருதுகள் கிடைத்து உள்ளன. தமிழில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்து இருக்கிறது. இந்த படத்தின் படத் தொகுப்பாளரான, சமீபத்தில் மறைந்த டி.இ.கிஷோர், சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதை பெற்று உள்ளார். அந்த வகையில் ‘விசாரணை’ படம் 3 விருதுகளை தட்டிச் சென்று உள்ளது.
வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
ஆந்திராவில் பிழைப்பு தேடி சென்ற அப்பாவி தமிழ் இளைஞர்களை அங்குள்ள போலீசார் பொய் வழக்கில் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். ஒரு தமிழக போலீஸ் அதிகாரி மூலம் அவர்கள் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகின்றனர். இங்கு அரசியல் சதியில் சிக்கி அவர்கள் என்கவுண்ட்டரில் கொல்லப்படுவதே கதை. இந்த படம் ஏற்கனவே சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்று உள்ளது.
இளையராஜாபாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசையமைத்த இளையராஜா சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ அவர் இசையமைத்த ஆயிரமாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கரகாட்ட கலைஞர்கள் வாழ்வியலை மையமாக வைத்து இந்த படம் வந்தது. சசிகுமாரும், வரலட்சுமியும் கரகாட்ட கலைஞர்கள். இருவரும் காதல் வயப்படுகின்றனர். ஆனால், சூழ்நிலை அவர்களை பிரிக்கிறது. வரலட்சுமி இன்னொருவரின் மனைவியாகி சித்ரவதைகளை அனுபவிக்கிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற சசிகுமார் முயற்சிக்கிறார். அது நடந்ததா? என்பது கதை.
ரித்திகா சிங்‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங்குக்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது கிடைத்து உள்ளது. உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்குக்கு இது முதல் படம் ஆகும். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்து உள்ளார்.
குத்துச்சண்டை வீரரான மாதவனை அரசியல் சதியால் போட்டியில் வீழ்த்துகின்றனர். இதனால் விரக்தி அடைந்து போதைக்கு அடிமையாகிறார். பிறகு குத்துச்சண்டை பயிற்சியாளராகி பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார். மீனவ குப்பத்து பெண்ணுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து, சர்வதேச போட்டியில் பங்கெடுக்க செய்து, எப்படி வெற்றி பெற வைக்கிறார்? என்பது கதை.
இந்த படத்தை சுதா கொங்கரா டைரக்டு செய்து இருந்தார்.
குழந்தை நட்சத்திரம்‘என்னு நின்டே மொய்தீன்’ என்ற மலையாள படத்துக்கு இசையமைத்த எம்.ஜெயச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
சிறந்த பின்னணி பாடகராக மகேஷ் காலேயும் (மராத்தி படம்: கத்யார் கல்ஜத் குஷாலி), சிறந்த பின்னணி பாடகியாக மோனாலி தாகூரும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். சிறந்த பாடலாசிரியருக்கான விருது வருண் குரோவருக்கு கிடைத்து இருக்கிறது.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கவுரவ் மேனனுக்கு கிடைத்து உள்ளது.
நர்கீஸ் தத் விருதுகன்னடத்தில் சிறந்த படமாக ‘திதி’யும், தெலுங்கில் சிறந்த படமாக ‘கஞ்சே’யும், மலையாளத்தில் சிறந்த படமாக ‘பதேமாரி’யும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது ‘நானக் ஷா பக்கீர்’ என்ற படத்துக்கும், சிறந்த சமுக படத்துக்கான விருது ‘நிர்ணயகம்’ படத்துக்கும் கிடைத்து இருக்கிறது.
சிறந்த குழந்தைகள் படமாக ‘துரந்தோ’வும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படமாக ‘வலிய சிறகுள்ள பட்சிகள்’ என்ற படமும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.
டெல்லியில் வருகிற மே மாதம் 3–ந் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment