ஊரக வளர்ச்சி: வரும் 2018, மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி: வரும் 2018, மே 1ம் தேதிக்குள், அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி கிடைக்க, 'தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின்' கீழ், 8,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 14வது நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, ஊரக வளர்ச்சி பணிகளுக்காக, சராசரியாக கிராம பஞ்சாயத்துக்கு, 80 லட்சம் ரூபாய், நகராட்சிக்கு, 21 கோடி ரூபாய் என, மொத்தம், 2.87 லட்சம் கோடி மானியம் அளிக்கப்படும்.
கிராம - நகரங்கள்:
சமீபத்தில் பிரதமர் அறிவித்த, 'ரூஹர்பன்' எனப்படும், சியாமா பிரசாத் முகர்ஜி, 'கிராம நகரங்கள்' இயக்கத்தின் கீழ், 300 கிராம தொகுப்புகள் மேம்படுத்தப்படும். நகரங்களில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகள், இந்த கிராமங்களில் கிடைக்கும். அதன்மூலம், விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருளை சந்தைபடுத்த, மிகப்பெரிய வாய்ப்பு கிடைப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும்.
'டிஜிட்டல்' கல்வி:
அடுத்து மூன்று ஆண்டுகளுக்குள், கிராமப் பகுதியில் உள்ள ஆறு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய டிஜிட்டல் கல்வி இயக்கம் துவங்கப்படும். இதற்கான விரிவான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.நில ஆவணங்கள்நில நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், அனைத்து நில ஆவணங்களையும் ஒருங்கிணைக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கிராமங்களுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, ஒரு வகையான வளர்ச்சியை ஏற்படுத்தும். அதே நேரத்தில், கிராம மக்கள் பங்களிப்போடு அவர்கள் விரும்பும் திட்டத்தை செயல்படுத்தும் போதே, கிராமங்கள் சுயாட்சியைப் பெற முடியும். -அண்ணாமலை, கவுரவ இயக்குனர், காந்தி கல்வி இயக்கம்
எதிர்கால மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, கிராமங்களையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு, மத்திய அரசின் நிதி பேருதவியாக இருக்கும். -வளையாபதி, உறுப்பினர், கிராம சுய சார்பு இயக்கம்
எஸ்.யு.வி., வாகனங்களுக்கு பாதிப்பு; கார் விற்பனை குறையும் என அச்சம்:'புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், கார் விற்பனை பாதிக்கப்படும்' என, உற்பத்தியாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.*4 மீட்டர் நீளத்திற்கு குறைவான, 1,200 சி.சி., இன்ஜின் திறனுக்கு மிகாத சிறிய ரக பெட்ரோல், எல்.பி.ஜி., - சி.என்.ஜி., கார்களுக்கு, ௧ சதவீதம்* 1,500 சி.சி.,க்கு மிகாத டீசல் கார்களுக்கு, 2.5 சதவீதம்* எஸ்.யு.வி., மற்றும் அதிக இன்ஜின் திறனுடைய கார்களுக்கு, 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது* இது தவிர, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையுடைய கார்களுக்கு, கூடுதலாக, 1 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது* இதன் மூலம் சிறிய கார்களின் விலை குறைந்த பட்சம், 2,600 ரூபாய் உயரும். பெரிய கார்களின் விலை குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் வரை உயரும் * நடுத்தர ரக எஸ்.யு.வி.,க்களின் விலை, குறைந்தபட்சம், 35 ஆயிரம் ரூபாயும், சொகுசு கார்களின் விலை குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயரும் * 'இந்தியாவில், எஸ்.யு.வி., வாகனங்களுக்கு
வரவேற்பு அதிகரித்துள்ளதால் பெரிய நிறுவனங்கள், அதிகளவில் எஸ்.யு.வி.,க்களை தயாரிக்க துவங்கியுள்ளன. தற்போது, 4 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது விற்பனையை பாதிக்கும்' என, உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.
தப்பிய வாகனங்கள் :
'மத்திய அரசின் புதிய வரி விதிப்பில் இருந்து, 'டூ வீலர்கள், பேட்டரி, ஹைப்ரிட், ஹைட்ரஜன்' வாகனங்கள் தப்பியுள்ளன. டாக்சி, மாற்றுத்திறனாளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை தப்பியிருப்பது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது' என, வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது, கார் உற்பத்தியாளர்களை பெரிதும் பாதிக்கும். வரிகளை எளிமைப்படுத்த முயன்றிருக்கும் மத்திய அரசு, கார்களுக்கு மட்டும் புதிய வரிகளை விதித்திருப்பது, ஆட்டோமொபைல் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் -வினோத் தாசரி , அசோக் லேலண்ட் நிறுவன தலைவர்
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:
அரசின் நலத்திட்டங்கள் அத்தனையும், உரியவர்களை சென்றடைய வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்டம், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இருப்பினும், ஆதார் அட்டை மூலம், நாட்டின் குடியுரிமை கோர எந்த உரிமையையும் வழங்கப்படவில்லை.ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ள நிலையில், தேசிய அடையாள ஆணைய சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் சமூக நலம்:
சுகாதாரம் மற்றும் சமூக நலம்:
மாவட்ட மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' பிரிவு
*நலிவடைந்த குடும்பங்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, சுகாதார காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும். இந்த குடும்பங்களைச் சேர்ந்த, 60 வயது பூர்த்தியான மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுகாதார காப்பீடு வழங்கப்படும் *குறைந்த விலையில் மருந்து பொருட்களை வழங்குதல், பெரும் சவாலாக உள்ளது. இதற்காக, 'பிரதமர் ஜன் ஔஷாதி' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், நடப்பு நிதியாண்டில், 3,000 மருந்து கடைகள் துவக்கப்படும். இக்கடைகளில், இனம் சார்ந்த, 'ஜெனரிக்' வகை மருந்துகள், மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் *இந்தியாவில், ஆண்டுதோறும், புதிதாக, 2.2 லட்சம் பேருக்கு, சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க, 2,000 ரூபாய் செலவாகிறது. இதற்கு தீர்வாக, 'தேசிய டயாலிசிஸ் சேவை திட்டம்' துவக்கப்படும். இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், அரசு சார்பில், 'டயாலிசிஸ்' சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் *தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், அரசு - தனியார் கூட்டுமுயற்சி முறையில், இத்திட்டத்திற்கான நிதி பெறப்படும். செலவை குறைக்க, டயாலிசிஸ் சாதனங்களின் சில பாகங்கள் மீதான, சுங்கம் மற்றும் கலால் வரி விலக்கிக் கொள்ளப்படும்.
1.5 கோடி குடும்பங்களுக்கு காஸ் :
* நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த, பெண் உறுப்பினர்களின் பெயரில், சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பிரம்மாண்ட திட்டம் துவக்கப்படும். இதன்மூலம், 2016 - 17ம் நிதியாண்டில், 1.5 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.
எஸ்.சி., - எஸ்.டி., மேம்பாடு:
*எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண்கள், தொழில்துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும், ஒரு கிளைக்கு, தலா இரு தொழில் திட்டங்கள் வீதம், கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 2.5 லட்சம் பேர் பயன்பெறுவர் *குறு - சிறு - நடுத்தர தொழில் துறை அமைச்சகம், தொழில் துறை அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனையம் உருவாக்கப்படும். இதன்மூலம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு தேவையான தொழில் முறை உதவிகள் வழங்கப்படும்.
விழிப்புணர்வு அவசியம்:
நீரிழிவு நோயாளிகளில், 3 சதவீதம் பேர், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, 'டயாலிசிஸ்' செய்யும் நிலையில் உள்ளனர். ஒருபுறம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபுறம் கட்டணம் கூடிக்கொண்டு போகிறது. மத்திய அரசின், தேசிய டயாலிசிஸ் திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், தனியார் பங்களிப்பு தொடர்ந்து சிறப்பாக இருப்பது அவசியம். மேலும், நீரிழிவுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.-டாக்டர் அ.பன்னீர்செல்வம்,நீரிழிவு நோய் நிபுணர்
ஏழைகளுக்கு பயன்
குறைந்த விலையில், 3,000 அரசு மருந்துக்கடைகள் துவக்கப்படுவது நல்ல முயற்சி. 'ஜெனிரிக்' மருந்துகள் உற்பத்தி விலைக்கே கிடைக்கும் என்பதால், ஏழை மக்கள் பயன்பெறுவர். அடுத்தடுத்த காலங்களில், இவற்றை வட்டார அளவில் பரவலாக்க வேண்டும். குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு என்பது, மேம்பட்ட மருந்துவ சிகிச்சை கிடைக்க வழி வகை செய்யும். -எஸ். இளங்கோ , தமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்
வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி:
*எப்.எஸ்.டி.சி., எனப்படும், நிதி ஸ்திரத்தன்மை மேலாண்மை கவுன்சிலின் கீழ், நிதிசார் தகவல் மேலாண்மை மையம் அமைக்கப்படும். இதன் மூலம், நிதித்துறையில், ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். *சமீப காலங்களில், நாடு முழுவதும், போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் நடந்த மோசடிகளில், பெரும்பாலும், ஏழைகள் மற்றும் நிதி தொடர்பான தகவல்களை அறியாதோர் ஏமாற்றப்பட்டனர். மோசடி நிதித் திட்டங்களால் அப்பாவிகள் ஏமாறுவதை தடுக்கும் வகையில், 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசு சட்டம் இயற்றும். *பங்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கூடுதல் அமர்வுகள் மற்றும் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில், 'செபி' சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். *வாராக்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுத்துறை வங்கிகளின் நிதிக்கட்டமைப்பை மறுசீரமைக்க, 2016 - 17ம் நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த வங்கிகளுக்கு கூடுதல் நிதியாதாரம் தேவைப்பட்டால், உருவாக்கித் தரப்படும்.
தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., மையங்கள் :
*நாடு முழுவதும், குறிப்பாக, கிராமப்புறங்களில் நிதி சேவைகளை சிறப்பாக அளிக்க, அடுத்த மூன்று ஆண்டுகளில், தபால் நிலையங்களில், ஏ.டி.எம்., மற்றும் மைக்ரோ ஏ.டி.எம்.,கள் நிறுவப்படும். *அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில், பொதுமக்கள் பங்குகள் வாங்கும் நடைமுறையால், வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க, அரசுக்கு சொந்தமான பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
விவசாயம், ஊரக வளர்ச்சி, சமூக நலன், கல்வி - வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற, நாட்டின் ஒன்பது துாண்களின் அடிப்படையில், வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் -அருண் ஜெட்லி, நிதி அமைச்சர்
No comments:
Post a Comment