குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்க, ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகி யார்? அந்த படத்தில் ரஜினிகாந்த் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (பி.விக்ரம்சிங், சென்னை)
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா பேசப்பட்டு வருகிறார். படத்தில், ரஜினிகாந்த் தாதாவாக நடிக்கிறார்!
***
விஜய்யுடன் விஷால் போட்டி போடுவதாக கூறப்படுகிறதே...? (ஜி.கோபால், திண்டுக்கல்)
கதாநாயகர்களுக்குள் போட்டி இருப்பது ஒன்றும் புதுசு அல்ல. போட்டி இருக்கலாம். பொறாமைதான் இருக்க கூடாது!
***
குருவியாரே, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் இல்லை என்றாலும், நட்பு இருக்கிறதாமே... அந்த நட்பு எந்த அடிப்படையில் உருவானது? (செ.தாமரை செல்வன், காஞ்சீபுரம்)
ஒரு டைரக்டருக்கும், கதாநாயகிக்குமான நட்பாக அரும்பி, இரண்டு பேருமே ஒரே மாநிலத்தை (கேரளா) சேர்ந்தவர்கள் என்ற முறையில் நெருக்கமானதாம். (கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு சென்று வந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர், பிரபுதேவா, இன்னொருவர், விக்னேஷ் சிவன்!)
***
‘துணை முதல்வர்’ படத்தை அடுத்து கே.பாக்யராஜ் எந்த படத்தில் நடிக்கிறார்? (வி.முருகேசன், குரும்பூர்)
பாக்யராஜ் இப்போது அவருடைய மகன் சாந்தனுவின் திருமண வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால், பட வேலைகளை கொஞ்ச காலம் தள்ளி வைத்து இருக்கிறார்!
***
குருவியாரே, காஜல் அகர்வாலின் சொந்த ஊர் எது, அவர் எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்? (எஸ்.ஜீவா, மதுரை)
காஜல் அகர்வால், மும்பையை சேர்ந்தவர். பாரதிராஜா அறிமுகம் செய்த கதாநாயகிகளில், மிகவும் கர்வமான சுபாவம் கொண்டவர், இவர்தான் என்கிறார்கள்!
***
தமிழ் திரையுலகில் தயாராகி வெளிவந்த முதல் ‘சினிமாஸ்கோப்’ படம் எது? (டி.சின்னதுரை, திருச்சி)
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்!’
***
குருவியாரே, ‘டார்லிங்’ பட கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே, ஏன்? (பி.ரகுராம், துவரங்குறிச்சி)
பேய் படத்தில் பேயாக நடித்தவர் என்பதால், ஜோடி போடுவதற்கு கதாநாயகர்கள் பயப்படுகிறார்கள் போலும்!
***
கதாநாயகியாக நடிக்க வந்து நகைச்சுவை நடிகையாக மாறியவர், மனோரமா. அதுபோல் நகைச்சுவை நடிகையாக நடிக்க வந்து கதாநாயகியாக மாறியவர் யார்? (என்.சுந்தர், வேலூர்)
வாணிஸ்ரீ! நகைச்சுவை நடிகையாக வர விரும்பிய இவர், கதாநாயகியாகி பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்!
***
குருவியாரே, இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்டு செய்யும் படம் எது? (டி.வி.சரண்ராஜ், கோவை)
படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை கையாளும் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஒரு காதல் படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். ‘புறம்போக்கு’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, அடுத்த படத்தை உடனடியாக தொடங்க அவரை தூண்டி இருக்கிறது!
***
நகைச்சுவை நடிகர் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி வில்லனாக நடித்து இருக்கிறாரா? (கே.ராதாகிருஷ்ணன், கோபிச்செட்டிப்பாளையம்)
‘சிவப்பு மனிதன்’ என்ற படத்தில், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி வில்லனாக நடித்து இருக்கிறார்!
***
குருவியாரே, மற்ற கதாநாயகிகளிடம் இல்லாதது, திரிஷாவிடம் மட்டுமே இருப்பது எது? (கே.பூவராகன், தூத்துக்குடி)
துணிச்சல்! அபாரமான துணிச்சல்!! ‘பார்ட்டி நடிகை’ என்று இவர் பிரபலமான பிறகும் அதுபற்றி கவலைப்படாமல், ‘பார்ட்டி’க்கு போவதை இன்னும் தொடர்கிறார். திருமண முறிவுக்குப்பின், அது மேலும் அதிகமாகியிருக்கிறதாம்!
***
பிரபு சாலமன் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படம் எந்த நிலையில் இருக்கிறது? (ஜே.சாம்சன் ஞானராஜ், பெங்களூரு)
பிரபு சாலமன் டைரக்டு செய்யும் புதிய படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். வருகிற ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இது, ஓடும் ரெயிலில் நடக்கிற கதை என்பதால் அதற்கான வேலைகள் இப்போதே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது!
***
குருவியாரே, தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் வாய்ப்பு இழந்த பிரியாமணி அடுத்து என்ன செய்யப்போகிறார்? (ஆர்.நந்தா, குரோம்பேட்டை)
மலையாளம், கன்னட மொழி படங்களில் வாய்ப்பு தேடுவது... அங்கேயும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறார், பிரியாமணி!
***
‘36 வயதினிலே’ படத்தை அடுத்து ஜோதிகா மறுபடியும் ஒரு புதிய படத்தில் நடிப்பாரா? (சோ.ராகேஷ், பெரியநாயக்கன்பாளையம்)
‘36 வயதினிலே’ படத்தைப்போல் மிக சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு வந்தால், நிச்சயமாக நடிப்பாராம்!
***
குருவியாரே, ராகவா லாரன்ஸ் இன்னும் எத்தனை பேய் படங்களை கொடுப்பார்? (சி.ராம்ராஜ், சேலம்)
ரசிகர்கள் போதும்...போதும்...என்று சொல்கிற வரை, ராகவா லாரன்ஸ் பேய் படங்களை கொடுத்துக்கொண்டே இருப்பார்!
***
ஏவி.எம். நிறுவனம் தயாரித்த முதல் படம் எது, இதுவரை அந்த நிறுவனம் எத்தனை படங்களை தயாரித்துள்ளது? (வி.மணிகண்டன், தாமரைக்குளம்)
ஏவி.எம். தயாரித்த முதல் படம், ‘அல்லி அர்ஜுனா.’ அந்த நிறுவனம் இதுவரை 176 படங்களை தயாரித்து இருக்கிறது. ஏவி.எம்.மின் 176–வது படம், ‘சிவாஜி 3டி.’
***
குருவியாரே, சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் அறிமுகமான கோபிகா இப்போது எங்கே இருக்கிறார்? அவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? (எம்.வாசுதேவ், வந்தவாசி)
கோபிகா, ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்!
***
பல படங்களில், பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் பாட்டியாக நடித்து இருக்கிறாரா? (வி.ராமச்சந்திரன், மேட்டூர்)
தங்கர்பச்சான் இயக்கிய ’ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் ஏற்கனவே பாட்டியாக நடித்து இருக்கிறார். இப்போது, ‘இன்பா ட்விங்கிள் லில்லி’ என்ற படத்தில் பாட்டியாக நடித்து வருகிறார்!
***
குருவியாரே, மலையாள பட உலகில், ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழ் படங்களில் நடிப்பாரா? (ஆர்.குணசிங், மார்த்தாண்டம்)
வருடத்தில் 2 மலையாள படங்களில் நடித்தால் போதும் என்று மஞ்சுவாரியர் முடிவு செய்து இருக்கிறாராம்!
***
‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை அடுத்து சிபிராஜ் நடிக்கும் படம் எது, அந்த படத்தை பற்றிய சிறப்பு தகவல் எதுவும் உண்டா? (ஜி.அருண்குமார், குன்னூர்)
சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் பெயர், ‘ஜாக்சன் துரை.’ இந்த படத்துக்காக அவர் தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்!
No comments:
Post a Comment