By முனைவர் தெ. ஞானசுந்தரம்
இருதய நோய்க்கு அடுத்து எண்ணற்ற உயிர்களை வாங்கும் நோய் என்ன தெரியுமா? மன அழுத்தம். மன அழுத்தம் என்பது வருத்தத்தைத் தந்து மனத்தைப் புண்ணாக்கும் வலிமையான ஆற்றல். ஒருவருக்கு மனச்சுமை தாங்க முடியாத அளவுக்குச் செல்கிறபோது அவர் துன்பத்தில் துவளத் தொடங்குகிறார். உள்ளத்தில் உருக்கொண்ட மனச்சுமை மேன்மேலும் வளர்ந்து உடலைக் கெடுக்கிறது ஹான்ஸ் செல்யீ(Hans Selye) என்னும் நாளமில்லாச் சுரப்பி மருத்துவரே மன அழுத்தம் என்னும் கோட்பாட்டினை 1939ஆம் ஆண்டு உருவாக்கினார்.
எதிர்கொள்ளாமலும் இணக்கமாக்கிக் கொள்ளாமலும் விடப்படும் தொடர் அழுத்தம் அல்லலாக மாறுகிறது. நோய்க்கு இடம் கொடுக்கிறது. அதனால் மூளை, இருதயம், நரம்பு மண்டலம் ஆகியவை பாதிப்புறுகின்றன. இக்கணிப்பொறிக் காலத்தில் சிறுவர்கள்கூட மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன
அழுத்தம் உள்ளார்ந்த நோய்; ஓர் உளவியல் சிக்கல்; ஒரு மனப்போக்கு. மனத்தை ஒழுங்குபடுத்தாமல் மருந்து உண்பது நோயைக் குணப்படுத்துவதைவிட உடலைக் கெடுத்துவிடுகிறது. மன அழுத்தம் உடையவர்கள் தீராத் தவிப்பும், நீங்கா அச்சமும், சோர்வும், தாழ்வு மனப்பான்மையும் உடையவர்களாகத் துன்புறுகிறார்கள்.
இன்று ஆங்கிலத்தில் மன அழுத்தம் குறித்துப் பல நூல்கள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று "Use Your Stress to keep away Distress" என்பது. அதன் மூன்றாவது அத்தியாயத்தின் தலைப்பு "Eustress". மேற்குறித்த நாளமில்லாச் சுரப்பி மருத்துவர்தான் இச்சொல்லை உருவாக்கி, "The Stress of Life" என்னும் தம் சிறந்த ஆய்வு நூலில் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நூலின் ஆசிரியர். ஒவ்வொரு பொருளுக்கும் மறுபக்கம் என்பது ஒன்று உண்டு என்றும், அதுபோல் மன அழுத்தத்திற்கும் மறுபக்கம் உண்டு என்றும், அந்த மறுபக்கத்தைக் குறிக்கிற சொல்லே யூஸ்டிரஸ் என்றும் குறித்துள்ளார். "உன்" (யூ) என்னும் முன்னொட்டு கிரேக்க மொழியின் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு "நன்மை' என்பது பொருள்.
மன அழுத்தம் முற்றுமாகக் கேடுதருவதன்று; அளவான அழுத்தம் நன்மை பயப்பது. வாழ்க்கைக்குச் சுவையும் மணமும் சேர்ப்பது, பாலால் ஆகிய இன்னமுதுக்குப் (பாயசத்துக்கு) போடும் ஏலம் போன்றது. வீணையில் நல்ல இசை பிறக்க வேண்டுமானால் அதன் நரம்புகள் தளர்வின்றி விசித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதுபோல் வாழ்க்கையில் இசை தோன்ற ஓரளவு இறுக்கம் (விசைப்பு) வேண்டும். அஃதாவது மன அழுத்தம் வேண்டும். உலகில் எவரும் முழுமையானவர் அல்லர். எல்லோரும் திறமையும் திறமையின்மையும் உடையவரே. முரண்படும் உடலையும் உள்ளத்தையும் ஒத்திசையும்படி செய்பவரே உயர்வின் உச்சியை அடைகின்றனர். சிப்பி தன் உள்ளே விழும் மழைத்துளியை வெளியேற்றப் பார்க்கிறது. முடியாதபோது அதன் உறுத்தலையே ஏற்று முத்தினை உருவாக்குகிறது. அதுபோல் தம்மை உறுத்தும் கவலைகளை எவர் நன்மைக்குப் பயன்படுத்துகிறாரோ அவரே வெற்றியை அடைகிறார். அழுத்தம் அறைகூவல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை மிகுவிக்குமானால் நன்மை விளைகிறது. இப்படி நன்மையாக மாறும் மன அழுத்தமே யூஸ்டிரஸ் என்று குறிக்கப்படுகிறது. அஃது அழுத்தத்தின் நல்வடிவம். வளர்வதற்கும் வாழ்வதற்கும் துணை நிற்பது.
இதற்குரிய தமிழ்ச் சொல் என்ன? நண்பர்களின் பரிந்துரை வருமாறு:
* சந்திரா மனோகரன் - இன்புறு மன அழுத்தம்
* கோ. மன்றவாணன் - நல்லழுத்தம், நல்லிறுக்கம்
*வெ. ஆனந்தகிருஷ்ணன் - நல்லழுத்தம்
* கா. மு. சிதம்பரம்- இன்சுவை, நல்லழுத்தம்
* என். ஆர். ஸத்யமூர்த்தி - இன்னழுத்தம்
* இரா. மோகனசுந்தரம் - நல்ல மனவலிமை
* ப. இரா. இராச அம்சன் - நல்லழுத்தம், நல்தகைவு
பெரும்பாலோர் "நல்லழுத்தம்' என்பதைத் தெரிவித்துள்ளனர். ஊழை - ஆகூழ், போகூழ் என்றும், வினையை நல்வினை, தீவினை என்றும் பகுத்துரைப்பதுபோல் மன அழுத்தத்தையும் ஆகு அழுத்தம், போகு அழுத்தம் என்றோ நல்லழுத்தம், தீயழுத்தம் என்றோ குறிக்கலாம். யூஸ்டிரஸ் என்பதை நல்லழுத்தம் என்றால், அகரமுதலியின் துணையின்றிப் புரிந்துகொள்ளும்படி அமையும்.
Wicket gate - நல்லழுத்தம்
No comments:
Post a Comment