வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி!




சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது, தானிய உற்பத்தியைப் பெருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் ரகங்களை உருவாக்கவும் "பசுமைப்புரட்சி' என்ற பெயரில் வேளாண் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் வேளாண் விஞ்ஞானி டாக்டர் பெஞ்சமின் பியாரி பால்.
பஞ்சாப் மாகாணத்தின் முகுந்த்பூரில் 1906, மே 26-இல் பிறந்தவர் பால். அவரது இயற்பெயர் பிரம்மதாஸ் பால். தந்தை மருத்துவர். சிறு வயதிலேயே அவரது குடும்பம் பர்மாவுக்குக் குடிபெயர்ந்தது.
பர்மாவின் மேமியோ என்ற ஊரிலுள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். அங்குதான் அவரது பெயர் பி.பி.பாலாக மாறியது.
ரங்கூன் பல்கலைக்கழகத்தில் படித்த பால், 1929-இல் எம்.எஸ்சி. தாவரவியலில் பட்டம் பெற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால் பர்மிய அரசின் கல்வி உதவித்தொகை அவருக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு பிரிட்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார் லால்.
அங்கு வேளாண் விஞ்ஞானி சர் ஃபிராங்க் எங்கில்டோவுடன் இணைந்து வீரிய ரக கோதுமை உற்பத்திக்கான ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதுவே பின்னாளில் அவரது வேளாண் ஆராய்ச்சிகளுக்கு களம் அமைத்துத் தந்தது.
பிஎச்.டி. பட்டம் பெற்று பர்மா திரும்பிய லால், பர்மிய விவசாய ஆராய்ச்சித் துறையில் உதவி நெல் ஆராய்ச்சியாளராக, 1933 மார்ச்சில் நியமிக்கப்பட்டார். ஆயினும், அதே ஆண்டு அக்டோபரில் பிகார் மாநிலம், புஸôவில் இருந்த இம்பீரியல் விவசாய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார்.
இந்நிறுவனம் 1936-இல் தில்லிக்கு இடம் பெயர்ந்தது; 1947-இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (Indian Agricultural Research Institute- IARI) என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் முதல் இயக்குநராகவும் பால் பொறுப்பேற்றார். 1950 முதல் 1965 வரை அதை தனது திறமையான வழிகாட்டலால் வளர்த்தார். அந்தக் காலகட்டத்தில், வீரிய ரக கோதுமை ரகங்கள் பலவற்றை பால் உருவாக்கினார்.
வேளாண் துறையில் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க விரும்பிய பால், ஐஏஆர்ஐ வளாகத்தில் வேளாண் முதுநிலைக் கல்லூரியை 1958-இல் தொடங்கினார். அதன்மூலம் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியத்தை அவர் மாற்றினார். இன்று நாடு முழுவதும் உள்ள வேளாண் விஞ்ஞானிகளில் பலர் ஐஏஆர்ஐ ஆராய்ச்சியாளர்களே.
1965-இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (Indian Council of Agricultural Research- ICAR) பொது இயக்குநராகப் பொறுப்பேற்ற பால், 1972 வரை அப்பதவியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் விவசாயத்துடன் பண்ணை விலங்குகளின் தீவனப் பயிரையும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த திட்டங்களை வடிவமைத்தார்.
விவசாயப் பயிர்கள், பண்ணை விலங்குகள், மீன்வளம் ஆகியவற்றை இணைக்கும் ஆராய்ச்சித் திட்டங்கள் வாயிலாக, விவசாயிகளின் வருவாயைப் பல வகைகளில் பெருக்க அவர் வழிவகுத்தார்.
கோதுமை உற்பத்தியில் புரட்சி
பால் வேளாண் விஞ்ஞானியான புதிதில் (1934), பூஞ்சை நோயால் கோதுமை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நோயிலிருந்து பயிரைக் காப்பதுடன் அதிக விளைச்சலை உருவாக்க வேண்டிய கட்டாயமும் அப்போது நிலவியது. அந்தச் சவாலை ஏற்று, தீவிரமாக பால் உழைத்தார்.
அதன் பலனாக, புதிய புஸா வரிசை (New Pusa Series) கோதுமை ரகங்கள் (1954) உருவாக்கப்பட்டன. என்பி 700, என்பி 800 வரிசையில் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டுரக கோதுமை ரகங்கள் பூஞ்சை நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டதுடன் அதிக விளைச்சலையும் தந்தன. அவற்றுள் என்பி 710, 718, 761, 770, 797, 798, 799, 809 ரகங்கள் முக்கியமானவை. இந்த ஆராய்ச்சிக்காக 18 ஆண்டுகள் கடினமாக உழைத்தார் பால்!
குறைந்த பாசன வசதியில் அதிக விளைச்சலைத் தரும் கோதுமை ரகத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியிலும் அவரது கவனம் சென்றது. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட என்பி 824 வீரிய கோதுமை ரகம், ஒரு ஹெக்டேருக்கு 3 டன் விளைச்சலைத் தந்தது. பின்னாளில் 1960-களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சிக்கு முன்னோடியாக அமைந்த சாதனை அது.
உருளைக்கிழங்கு, புகையிலை, தக்காளி ஆகியவற்றிலும் விவசாயிகளுக்குப் பலனளிக்கும் புதிய ரகங்களை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பால் ஆர்வம் கொண்டிருந்தார். ரோஜாக்கள், போகன்வில்லாக்கள் தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகவும் பிடித்தமானது. சுமார் 40 வகையான புதிய ரோஜாக்களை பால் உருவாக்கி இருக்கிறார்.
இந்திய ரோஜா, போகன்வில்லா சங்கத்தை அவர் நிறுவினார். இந்திய மரபுப்பயிர் மற்றும் தாவர அபிவிருத்தி சங்கத்தையும் பால் நிறுவினார்; அதன் விஞ்ஞான சஞ்சிகையை 25 ஆண்டுகள் நடத்தினார்.
பால் சிறந்த எழுத்தாளரும் கூட. The Rose in India, Beautiful Climbers of India, Flowering Shrubs of India, Bougainvilleas and Environmental Conservation and Development - ஆகியவை அவரது நூல்களில் முக்கியமானவை. தானியங்கள் தொடர்பான தனி வரைநூல்களை (Monograph) அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் கோதுமை குறித்த நூல் பிரபலமானது.
பிலிப்பைன்ஸில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம் 1960-இல் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் ஆரம்பகால அறங்காவலராக பால் பணியாற்றினார். அவர் உருவாக்கிய புதிய பயிர் ரகங்கள் உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் பரவி, உணவு உற்பத்தியைப் பெருக்கின.
பீர்பல் சாஹ்னி பதக்கம் (1962), இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஸ்ரீநிவாச ராமானுஜன் விருது (1964), ஆசியாட்டிக் சொûஸட்டியின் பார்க்லே பதக்கம் (1971), பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் (1972), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1959), பத்மபூஷண் (1968), பத்ம விபூஷண் (1987) உள்ளிட்ட பல கெüரவங்களை விஞ்ஞானி பால்
பெற்றுள்ளார்.
விவசாய ஆய்வும் தனது சகோதரிகளின் வாழ்வுமே இரு கண்களாகக் கொண்டு, பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த பால், 1989, செப். 14-இல் மறைந்தார். அப்போது, தனது சொத்துகள் அனைத்தையும் ஐஏஆர்ஐ-க்கு தானமாக எழுதிவைத்தார் அவர்!
பால் நினைவாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment