அரண்மனையைச் சூழ்ந்த கோட்டையிலும், பெருங்கோயில்களிலும் பெரிய வளமனைகளிலும் முகப்பில் உயர்ந்த பெரிய வாயில்கள் இருக்கும். அயோத்தியின் நான்கு பக்கங்களிலும் திசையானைகளைப் போல் நான்கு வாயில்கள் இருந்தன என்றும், அவை முன்னர், திருமால் விரைந்து விண்ணையளந்த திருவடியைவிட உயர்ந்திருந்தன என்றும் கூறுகிறார் கம்பர். அவற்றின் கதவுகள் இரும்பினாலோ, உறுதியான மரத்தினாலோ அமைந்திருக்கும். அவற்றை அடிக்கடி திறப்பது தொல்லையாக அமையும். அதனால் அக்கதவுகளுக்குப் பக்கத்திலோ, அக்கதவுகளினிடையிலோ கதவுகளோடு கூடிய ஒரு சிறுவழியை அமைத்திருப்பார்கள். பெரிய கதவுகள் மூடியிருந்தாலும் அச்சிறிய வழியைக்கொண்டு எளிதில் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும். அஃது ஓர் ஆள் செல்லக்கூடிய அளவில்தான் அமைந்திருக்கும். அதனால், காவலர்கள் நுழைபவரைக் உன்னிப்பாகக் கவனிப்பதற்கும் வாய்ப்பு அமையும். அத்தகைய கதவுகளோடு கூடிய சின்ன வழியினைத்தான் ஆங்கிலத்தில் "விக்கெட் கேட்' என்று குறிக்கின்றனர்.
கோட்டைச் சுவர்களில் பகைவர்கள் முற்றுகையிட்டிருக்கும்போது தப்பிச் செல்வதற்காக ஒருசில இடங்களில் சிறுபாதை அமைத்திருப்பார்கள். அதனைப் "புழை' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அது வேறு; இந்தச் சிறுவழி வேறு. அது மறைவான வழி; சிலரே அறிந்தது. இது வெளிப்படையாக அமைந்த வழி; பலரும் அடிக்கடி பயன்படுத்தும் வழி. இது பெரிய வாயிலுக்கு அருகிலேயோ உள்ளேயோ அமைந்த துணைவாயில் ஆகும். இதனை,
*டி.வி. கிருஷ்ணசாமி - சிறிய நுழைவாயில்
* மீனா கண்ணன், வெ. ஆனந்தகிருஷ்ணன் - திட்டி வாயில்
* இரா. மோகனசுந்தரம், கோ. மன்றவாணன் - திட்டி வாசல், புழை வாயில்
* ஞா. அருண்மொழி - பக்கக் கதவு
*ப. இரா. இராசஅம்சன் - சிறப்பு வாயில்
* என். ஆர். ஸத்யமூர்த்தி - பகுதிச் சிறுபடலை
* கா. மு. சிதம்பரம் - படிக் கதவம்
எனத் தமிழாக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
நம்பிள்ளை திருவாய்மொழி விளக்கப்பொழிவு முடிந்து திரள் கலைந்தது. அப்போது பின்பழகிய பெருமாள்சீயர் என்பவர் நம்பிள்ளையை வணங்கி, ""இவ்வுயிரின் தன்மை யாது? உய்யும் நெறி யாது? அடையும் பேறு யாது?'' என்று வினவினார். நம்பிள்ளை, ""இச்சை உயிரின் தன்மை; இரக்கம் உய்யும் நெறி; இனிமை அடையும் பேறு'' என்றார். அதனைக் கேட்ட சீயர் ""என் கருத்து வேறு'' என்றார். உடனே, ""உமக்கு என்று சில பிள்ளைக் கிணறு உண்டோ? (உட்கருத்து உண்டோ?) உம் கருத்தைத் தெரிவியும்'' என்றார் நம்பிள்ளை. அதற்குச் சீயர், ""தாங்கள் சொன்னபடியே நினைத்திருக்கும் வைணவ அடியார்களுக்கு அடிமையாய் இருக்கை - தன்மை; அவர்களுடைய பற்று - அடியேனுக்கு உய்யும்நெறி; அவர்கள் முகமலர்த்தி - அடியேனுக்குப் பேறு'' என்றார். அதனைக் கேட்டு நம்பிள்ளை மகிழ்ந்தார் என்று "வார்த்தாமாலை' என்னும் நூலின் இரண்டாம் வார்த்தை அமைந்துள்ளது. இதில் வரும் பிள்ளைக் கிணறு நம் சிந்தனைக்குரியது.
கிணற்றில் தண்ணீர் மட்டம் கீழே இறங்கிவிட்டால் அதனுள்ளே தண்ணீர் ஊறுவதற்காக உறைகளை இறக்கிச் சிறுகிணறு எடுக்கும் வழக்கம் உண்டு. அதனைப் பிள்ளைக் கிணறு என்று குறிப்பர். அது கிணற்றுக்குள் அமைந்த சின்னக் கிணறு. கிணற்றுக்குள் இருக்கும் சிறுகிணற்றைப் பிள்ளைக் கிணறு என்றால், வாயிலுக்குள் இருக்கும் வாயிலைப் "பிள்ளை வாயில்' என்று குறிப்பது பொருத்தமாக அமையுமல்லவா? "பிள்ளை' என்னும் சொல் "சிறிது' என்னும் பொருளைத் தருவதாகும். ஆகவே, இச்சொல் பக்கத்தில் இருக்கும் சிறுவாயிலைக் குறிப்பதாகவும் அமையும்.
எனவே,Wicket Gate என்பதைப் பலரும் குறித்துள்ளவாறு திட்டிவாயில் என்றோ பிள்ளை வாயில் என்றோ குறிப்பது பொருத்தமாக அமையும். பிள்ளை வாயில் என்பதில் சிறிது கற்பனை கலந்திருப்பது காணலாம்
Wicket Gate - பிள்ளை வாயில் அல்லது திட்டி வாயில்
No comments:
Post a Comment