வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் இலவபுரீஸ்வரர்

சென்னை ரெட்ஹில்ஸிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது விளாங்காடுபாக்கம். இங்கு குடிகொண்டு எழுந்தருளியிருக்கும் சிவனின் திருநாமம் இலவபுரீஸ்வரர்! அம்பாள் திரிபுரசுந்தரி. இத்தலத்து மூலவர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையுடையவர். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கற்கோயிலாகக் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆலயத்தின் சுற்றுப்பிரகாரம் "ஓம்' என்ற வடிவத்தில் அமைந்திருப்பது விஷேசமான ஒன்றாகும். ஆலய மண்டபத்தின் மேற்புறத்தில் சூரியன் மற்றும் சந்திரனை ராகு - கேதுக்கள் பிடிக்கும் கிரகண வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்லி, கிளி, ஆமை போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் ஆமை வந்துவிட்டது என்று பயப்படுபவர்கள் இக்கோயிலில் தீர்த்தம் பெற்றுச்சென்று தங்கள் வீட்டில் அத்தீர்த்ததைத் தெளிக்க, ஆமை புகுந்த தோஷம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். இவ்வாலயத்தின் மூலவரை ஸ்ரீ ராமரின் பிள்ளைகளான லவன், குசன் வழிபட்டு வந்துள்ளனர் என்பது இவ்வாலயத்தின் பழைமையை பறைசாற்றுகிறது எனலாம்.
இவ்வாலயம், மிகச்சிறந்த பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமைகளில் இத்தலத்திலுள்ள, நந்தி பகவானின் மீது எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் புத்திரப்பேறு கிடைக்கும்; நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்! திருச்சுற்றில் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகரை களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், உள்ளவர்களும் திருமணப்பேறு வேண்டுபவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு நலம் பெறலாம். பல்வேறு காரணங்களுக்காக பிரிந்திருக்கும் கணவன் மனைவி இருவரும் இத்தலத்திற்கு வந்து அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் குங்கும அர்ச்சனை செய்வதுடன் சுக்கிரனையும் வழிபட்டால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து இணக்கமுடன் வாழ்வர் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
மாணவர்கள், புதன்கிழமைகளில் இங்கு வீற்றிருக்கும் லட்சுமிதேவி மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடையலாம். அம்பாள் சந்நிதிக்கு பின்புறத்தில் அமைந்திருக்கும் காசிலிங்கம் மற்றும் பூதலிங்கத்தை வழிபட்டு வர, வீட்டு மனை, வீடு வாங்கும் பாக்கியமும் உண்டாகும்.
இக்கோயிலில் 108 தெய்வத் திருமேனிகள் அமையப்பெற்றுள்ளன. 12 ராசிகளுக்கும் இரட்டை நாக சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மேலும் இங்கு 27 நட்சத்திரங்களையும் 27 தூண்களாக பாவித்து இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாகும்.
இலவபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி கருவறையில் எழுந்தருளியிருக்க, இறைவி திரிபுரசுந்தரி இறைவனுக்கு இடப்பக்கத்தில் சந்நிதி கொண்டு கிழக்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மிகச் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய நிலையை காணமுடியும்.
ஆஞ்சநேயர், நாராயணர், நாராயணி, பிரம்மனி, விஷ்ணு துர்கை, பிரம்மா, சங்கரி, வைஷ்ணவி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் மூர்த்தங்கள் அமையப்பெற்று அருள் செய்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தின் முன் மண்டப மேற்கூரையில் வலம்புரி விநாயகர், வால்மிகி மகரிஷி, லவன், குசன் இறைவனை பூஜிப்பது, அம்பாள், வள்ளி, தெய்வயானை சமேத முருகப்பெருமான், வடக்குத் திசையில் அமைந்த குபேர லிங்கத்திற்கு பால்சொரியும் காமதேனு ஆகிய திருவுருவங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
தற்போது கோயிலின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்துள்ள நிலையில் காணப்படுவதால் அதனை புதிதாக அமைக்கும் திருப்பணிகளும் நடைபெறுகின்றன. பக்தர்கள் இந்த திருப்பணியில் பங்குகொண்டு இறையருள் பெற்று நலம் பெறலாம்.
தொடர்புக்கு: 97899 15794

No comments:

Post a Comment