வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.
 விரதம்:
மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.
மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
விநாயகரும் தத்துவங்களும்:
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகனா!
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து “ஓம்” என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் ‘பிரணவன்’ என்றும் ‘மூத்த பிள்ளையார்’ என்றும் அறியப்படுகின்றது. ‘ஓங்கார நாத தத்துவம்’ சிவனையும் சுட்டிநிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாக் அழைக்கப்படுகின்றார். “ஓம்” என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர்.
அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடுகளிலே வலது திருவடியை “முற்றறிவு” அதாவது “ஞானசக்தி” என்றும் “இடது திருவடியை“முற்றுத்தொழில் அதாவது “கிரியாசக்தி”என்றும் உணர்த்தப்படுகின்றது. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது.
எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்த ஒருரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரதுபேருந்தி காட்சி கொடுக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்,ஆனைமுகனின் பானை வயிற்றில்தான் (புவியும்) பிரபஞ்ச்சமே அடக்கம் என்பர். அவன் செயல் புவி ஈர்ப்பு விசையிலும் மேலானது அத்தனை அண்டங்களையும் கட்டி இழுத்திடும் விசை என்றும், வழிமாறிப்போனவற்றை சமன் செய்யும் விசை என்றும் போற்றுகின்றனர்
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு “ஐங்கரன்” என்ற நாமம் விளங் குகின்றது. அவரை “பஞ்சகிருத்திகள்” என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.
வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்” இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்” உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.
அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் “குண்டலினி சக்தியின்” வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது.
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு “சித்தி”, “புத்தி” என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது.
விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது.
துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.
உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக“பிள்ளையார் சுழி” எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ‘ள’ என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும்.
இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பூஜ்ஜியமன வட்டதை “0” பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை ” நாதம்” என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை “நாதபிந்து” என்பவர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.
எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
விநாயகர் விரதங்கள்:
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன.
சுக்கில பட்சச் சதுர்த்தியை “சதுர்த்தி விரதம்” என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை “நாக சதுர்த்தி” என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை “விநாயக சதுர்த்தி” என்றும் கைக்கொள்கின்றனர்.
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை “சங்கடஹர சதுர்த்தி” என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை “சங்கடஹர சதுர்த்தி விரதம்”என்கின்றனர்.
இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை “சங்கடஹர விநாயக சதுர்த்தி” என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் “விநாயக சதுர்த்தி விரதமே”அதிவிஷேடமானது.
சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான “தேவி” விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. ஒருசில வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு.
சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. அனேகமான இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர்.
அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் விஷேட நோன்பு தினமாகக் கைக்கொள்வர். மேலும் சிலர் காரத்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வ பட்ச ஷஷ்டிவரை அதை “விநாயக ஷஷ்டி” என்பர்கள்
காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர். அந்த நாட்களில் அனேகமான விநாயகர் ஆலயங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதுடன் “பிள்ளையார் கதை” ஜபெருங் கதை என்ற புராண படனமும் பராயணம் செய்யப்படும்.
தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொறிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஒவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர்.
ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, “ஆனந்த சதுர்த்தசியான” பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர். இப்படிச் செய்வதனால் சூழல் மாசடைவதாக ஆர்வலர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.
இந்தக் கலாசாரம் மெதுமெதுவாகத் தென்னகத்திற்குள்ளும் வந்து சேர்வதாகக் கூறப்படுகின்றது. சத்திரபதி சிவாஜி மன்னர் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த விநாய சதுர்த்தி விழா, பின்னாட்களில் நாடு வேற்று நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தால் விநாயக சதுர்த்தி விழாவின் முக்கியத்துவம் குன்றிவிட்டது.
1893ம் ஆண்டளவில் லோகமானிய திலகர், அந்நியரின் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக விநாய சதுர்த்திக் கொண்டாட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். அதைப் பிரபல்யப்படுத்தி பெரு விழாவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் வகுத்துவைத்தார். அன்றிலிருந்த இன்றுவரை வட மாநிலங்களில் அந்தப் பத்துத் தினங்களும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
விநாயகரின் ஒரு கரத்தில் ஏடும் மறுகரத்தில் கொம்பும் இருப்பது போன்று காணப்படுகின்ற கணத்தை ‘வித்தியபிரதாதா’ என அழைப்பர். விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர்.
21 வகை பதிரங்களை கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் .
சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
விநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்பு:
விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.
சூரியன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததுள்ளது
விநாயகருக்கு அறுகும் வன்னிப் பத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மருது, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.
கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.
அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.
தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.
இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.
அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.
வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.
தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.
விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)
விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.
இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்).
மாத சதுர்த்தி விரதம்:
மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.
மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.
விரத உத்தியாபனம்:
குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.
முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப்பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.
விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது “வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே ”
(விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து முடிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது ” ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யுதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ ” (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப்பொருட்கள் முதலிய தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.
பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.
விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.
ஸ்ரீ விநாயகர் துதி!
கஜாநனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாதபங்கஜம்
மூஷிக வாஹன மோதகஹஸ்தம்
சாமரகர்ண விலம்பித ஸ¤த்ர
வாமநரூப மஹேஸ் வரபுத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்:
விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்: ( இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்)
ஓம் பார்வதீ நந்தநாய நம : – பாதௌ பூஜயாமி – கால்கள்
ஓம் கணேசாய நம : – குல்பௌ பூஜயாமி – கணுக்கால்கள்
ஓம் ஜகத் தாத்ரே நம : – ஜங்கே பூஜயாமி – பாதத்துக்கு மேல்
ஓம் ஜகத் வல்லபாய நம : – ஜானுனீ பூஜயாமி – முழங்கால்
ஓம் உமாபுத்ராய நம : – ஊரூ பூஜயாமி – தொடை
ஓம் விகடாய நம : – கடிம் பூஜயாமி – இடுப்பு
ஓம் குஹாக்ரஜாய நம : – குஹ்யம் பூஜயாமி – மறைவிடம்
ஓம் மஹத்தமாய நம : – மேட்ரம் பூஜயாமி – ஆண்குறி
ஓம் நாதாய நம : – நாபிம் பூஜயாமி – தொப்பூள்
ஓம் உத்தமாய நம : – உதரம் பூஜயாமி – வயிறு
ஓம் விநாயகாய நம : – வஷம் பூஜயாமி – மார்பு
ஓம் பாஸச்சிதே நம : – பார்ஸ்வௌ பூஜயாமி – இருபக்கங்கள்
ஓம் ஹேரம்பாய நம : – ஹ்ருதயம் பூஜயாமி – இதயம்
ஓம் கபிலாய நம : – கண்டம் பூஜயாமி – கழுத்து
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம : – ஸ்கந்தௌ பூஜயாமி – தோள்கள்
ஓம் ஹரஸுதாய நம : – ஹஸ்தான் பூஜயாமி – முன்கைகள்
ஓம் ப்ரஹ்மசாரிணே நம : – பாஹுன் பூஜயாமி – மேற்கைகள்
ஓம் ஸுமுகாய நம : – முகம் பூஜயாமி – முகம்
ஓம் ஏகதந்தாய நம : – தந்தௌ பூஜயாமி – தந்தங்கள்
ஓம் விக்கினநேத்ரே நம : – நேத்ரே பூஜயாமி – கண்கள்
ஓம் சூர்ப்பகர்ணாய நம : – கர்ணௌ பூஜயாமி – காதுகள்
ஓம் பாலசந்த்ராய நம : – பாலம் பூஜயாமி – நெற்றி
ஓம் நாகாபரணாய நம : – நாஸிகாம் பூஜயாமி – மூக்கு
ஓம் கிரந்தனாய நம : – சுபுகம் பூஜயாமி – மோவாய்
ஓம் ஸ்தூலௌஷ்டாய நம : – ஒஷ்டௌ பூஜயாமி – மேலுதடு
ஓம் களன்மதாய நம : – கண்டௌ பூஜயாமி – கழுத்து
ஓம் கபிலாய நம : – கசான் பூஜயாமி – இடுப்பு
ஓம் சிவப்ரியாய நம : – சிரம் பூஜயாமி – தலை
ஓம் ஸர்வமங்களஸுதாய நம : – ஸர்வாண்யங்காணி பூஜயாமி – எல்லா அங்கங்களும்.
விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும்:
ஓம் உமாபுத்ராய நம : – மாசீபத்ரம் சமர்ப்பயாமி – மாசிப்பச்சை
ஓம் ஹேரம்பாய நம : – ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி – கண்டங்கத்தரி
ஓம் லம்போதராய நம : – பில்வபத்ரம் சமர்ப்பயாமி – வில்வம்
ஓம் த்விரதானனாய நம : – தூர்வாம் சமர்ப்பயாமி – அறுகம்புல்
ஓம் தூமகேதவே நம : – துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி – ஊமத்தை
ஓம் ப்ருஹதே நம : – பதரீபத்ரம் சமர்ப்பயாமி – இலந்தை
ஓம் அபவர்க்கதாய நம : – அபாமார்க்கபத்ரம் சமர்ப்பயாமி – நாயுருவி
ஓம் த்வைமாதுராய நம : – துளசீபத்ரம் சமர்ப்பயாமி – துளசி
ஓம் கிரந்தனாய நம : – சூதபத்ரம் சமர்ப்பயாமி – மாவிலை
ஓம் கபிலாய நம : – கரவீரபத்ரம் சமர்ப்பயாமி – அலரி
ஓம் விஷ்ணுஸ்துதாய நம : – விஷ்ணுக்ராந்தபத்ரம் சமர்ப்பயாமி – விஷ்ணுகிராந்தி
ஓம் வடவே நம : – தாடிமீபத்ரம் சமர்ப்பயாமி – மாதுளை
ஓம் அமலாய நம : – ஆமலகீபத்ரம் சமர்ப்பயாமி – நெல்லி
ஓம் மஹதே நம : – மருவகபத்ரம் சமர்ப்பயாமி – மருக்கொழுந்து
ஓம் ஸிந்தூராய நம : – ஸிந்தூரபத்ரம் சமர்ப்பயாமி – நொச்சி
ஓம் கஜாநநாய நம : – ஜாதீபத்ரம் சமர்ப்பயாமி – மல்லிகை
ஓம் கண்டகளன்மதாய நம : – கண்டலீபத்ரம் சமர்ப்பயாமி – வெள்ளெருக்கு
ஓம் சங்கரீப்ரியா நம : – சமீபத்ரம் சமர்ப்பயாமி – வன்னி
ஓம் ப்ருங்கராஜத்கடாய நம : – ப்ருங்கராஜபத்ரம் சமர்ப்பயாமி – கரிசலாங்கண்ணி
ஓம் அர்ஜுனதந்தாய நம : – அர்ஜுனபத்ரம் சமர்ப்பயாமி – வெண்மருது
ஓம் அர்க்கப்ப்ரபாய நம : – அர்க்கபத்ரம் சமர்ப்பயாமி – எருக்கு
விநாயக புஷ்ப பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும் அவற்றுக்குரிய புஷ்பங்களும்:
ஓம் பஞ்சாஸ்ய கணபதியே நம : – புந்நாக புஷ்பம் சமர்ப்பயாமி – புன்னை
ஓம் மஹாகணபதியே நம : – மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி – மந்தாரை
ஓம் தீர கணபதயே நம : – தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி – மாதுளை
ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம : – வகுள புஷ்பம் சமர்ப்பயாமி – மகிழ்
ஓம் ஆமோத கணபதயே நம : – அமருணாள புஷ்பம் சமர்ப்பயாமி – வெட்டிவேர்
ஓம் ப்ரமத கணபதயே நம : – பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி – பாதிரி
ஓம் ருத்ர கணபதயே நம : – த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி – தும்பை
ஓம் வித்யா கணபதயே நம : – துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி – ஊமத்தை
ஓம் விக்ன கணபதயே நம : – சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி – செண்பகம்
ஓம் துரித கணபதயே நம : – ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி – மா
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம : – கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி – தாழை
ஓம் ஸம்மோஹ கணபதயே நம : – மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி – முல்லை
ஓம் விஷ்ணு கணபதயே நம : – ஸம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி – கொன்றை
ஓம் ஈச கணபதயே நம : – அர்க்க புஷ்பம் சமர்ப்பயாமி – எருக்கு
ஓம் கஜாஸ்ய கணபதயே நம : – கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி – செங்கழுநீர்
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம : – ஸேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி – செவ்வந்தி
ஓம் வீர கணபதயே நம : – பில்வ புஷ்பம் சமர்ப்பயாமி – வில்வம்
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம : – கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி – அலரி
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம : – குந்த புஷ்பம் சமர்ப்பயாமி – குண்டுமல்லி
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம : – பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி – பவளமல்லி
ஓம் ஜ்ஞான கணபதயே நம : – ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி – மல்லிகை
விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்:                                (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)
ஓம் கணாதிபாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் ஆகுவாஹனாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் ஈசபுத்ராய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் இபவக்த்ராய நம:
ஓம் மூஷிகவாஹனாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் கபிலவர்ணாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் மோதகஹஸ்தாய நம:
ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
ஓம் கஜநாஸிகாய நம:
ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
ஓம் கஜமுகாய நம:
ஓம் ஸுப்ரஸன்னாய நம:
ஓம் ஸுராக்ரஜாய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:
பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.
மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.
வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!
– ஒளவையார்
“நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்”
மகிமைபெற்ற எம்பிரானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்திபெறுவோம்.
“ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே

No comments:

Post a Comment