பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார் சென்னை சிறுமி ஹெப்சிபா. இதுதவிர மேலும் இரண்டு பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியோ நகரில் நடந்த போட்டியில் சுறுசுறுப்பாக பங்கேற்று பலரது கவனத்தையும் ஹெப்சிபா ஈர்த்துள்ளார். யார் இந்த ஹெப்சிபா எனத் தெரிந்துகொள்வோம்.
ஹெப்சிபா வயது 16. வசிப்பிடம் முன்னதாக நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே இருந்த சாலையோர நடைமேடை, தற்போது சென்னை மாநகராட்சியின் வீடற்றவர்களுக்கான தங்கும் கூடாரம்.
ஹெப்சிபாவுக்கு ரியோ செல்ல கிடைத்த வாய்ப்பு தற்செயலானதுதான் ஆனால் அதை அவர் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்கிறார் அவரை ரியோவுக்கு அழைத்துச் சென்ற கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பால் சுந்தர் சிங்.
அவர் கூறும்போது, "ரியோவில் நடைபெறவுள்ள தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி குறித்த அறிவிப்பு வெளியானதுமே, நாங்கள் அதில் பங்கேற்க தகுதி வாய்ந்த குழந்தைகளை தேடும் பணியைத் தொடங்கினோம்.
சென்னையில் வசிக்கும் தெருவோரக் குழந்தைகளுக்கான தகுதிப் போட்டி ஒன்றை நடத்தினோம். அதில் பங்கேற்ற ஹெப்சிபா அபாரமாக விளையாடினார். ஐந்து குழந்தைகளை தேர்வு செய்தோம். ஹெப்சிபாவுக்கு குறித்த நேரத்தில் பாஸ்போர்ட் கிடைத்தது ஒரு அற்புத நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.
அவரது பயண செலவை ஸ்பான்சர் செய்ய யாரும் கிடைக்காததால், நான் கடனாக பணத்தைப் பெற்று ஹெப்சிபாவை ரியோவுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஹெப்சிபா அபாரமாக தனது திறமைகளை வெளிப்படுத்தினார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதோடு மேலும் இரண்டு பதக்கங்களையும் அவர் வென்றார். ரியோவில் ஒன்றரை வாரம் தங்கியிருந்தோம். உலகம் முழுவதுமிருந்தும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகள் பலர் வந்திருந்தனர்" என்றார்.
'புதிய நட்பு'
தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றிருந்தாலும் தன்னைப் போன்று பிற நாடுகளில் உள்ள சக குழந்தைகளைப் பார்த்துப் பழகியதே தனக்கு ஆனந்தம் எனக் கூறுகிறார் ஹெப்சிபா. எனக்கு இப்போது, பாகிஸ்தான், எகிப்து, பிரிட்டன், அர்ஜென்டினா, பிரேசில், போன்ற நாடுகளில் நண்பர்கள் இருக்கிறார்கள். இதுவே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ரியோவில், தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி பொது சபையின் கருத்தரங்கும் நடைபெற்றது. அதில் பேசிய உஷா, "தெருவோரம் வசிக்கும் நாங்கள் ஒவ்வொரு நாளையும் போலீஸ் மீதான அச்சத்துடனேயே கடக்கிறோம். போலீஸ் எங்களுக்கு ஆதரவளித்து, பாதுகாக்க வேண்டும். ஆனால், அவர்களுடனான எங்கள் அனுபவம் அதுவல்ல. தெருவோர சிறுவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறையை தடுக்க, போலீஸ் பயிற்சியின்போது தெருவோரக் குழந்தைகளை அழைத்து பேசவைக்க வேண்டும். அப்போதும் அவர்களால் எங்களிடத்திலிருந்து எங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும்" என்றார். அவரது பேச்சைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.
பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு சென்னை தெருவோரக் குழந்தைகள் ஹெப்சிபா, ஸ்நேகா, உஷா, அசோக் ஆகியோர் தாயகம் திரும்பிவிட்டனர்.
இவர்களது இப்போதைய ஒரே தேவை தெருவில் இருந்து விடுதலை; தலைக்கு மேல் ஒரு கூரை. நிரந்தரமான, தரமான தங்குமிடம் இவர்கள் சிறகுகளுக்கு கூடுதல் பலமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.