“என் பொண்ணு சவும்யா வுக்கு கவுன்சலிங்ல வெளியூர் காலேஜ்லதான் சீட் கிடைச்சிருக்கு. அவளைச் சேர்க்கலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்குது!” - புவனாவிடம் சொன்னாள் எதிர்வீட்டு சுமதி.
“கவர்மென்ட் சீட், சேர்த்துட வேண்டியதுதானே? இங்கேயே ஏதாவது காலேஜ்ல சேர்க்கணும்னா கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்கணுமில்ல. மற்ற ஃபீஸும் அதிகமாத்தானே இருக்கும்?” - சொன்னாள் புவனா.
“அதெல்லாம் சரிதான் புவனா. ஆனா நம்மகூட இருக்கிறப்பவே நம்ம பொண்ணு வெளியே போய்ட்டு வீடு திரும்ப தாமதமானா என்ன ஆச்சுதோன்னு நினைக்கத் தோணுது. பொண்ணை வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க வைச்சா நிம்மதியா இருக்க முடியுமா? சுதந்திரமா இருக்கிறோம்னு அவ உலகம் புரியாம இருந்து, ஏதாவது நடந்துடுமோன்னு பயமாயிருக்குது.”
“என் பையன் ஆனந்த்கூட கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கித்தான் படிக்கி றான். நான் தைரியமா இல்லையா?”
“ஆம்பிளைப் பையனும் பொண்ணும் ஒரே மாதிரியா? தினம் தினம் பொண்ணுங்க மீதான பாலியல் வன்முறைன்னு எத்தனை எத்தனை நியூஸ் வருது. படிக்கும்போதே திக்திக்னு இருக்குது.”
“சுமதி! ஆம்பளைப் பையன்னா பயப்பட வேண்டாம்னு சொல்றியா? இன்னிக்கு இருக்கிற செல்போன், இன் டெர்நெட்ல நல்லது இருக்கிற அளவுக்கு கெட்டதும் இருக்குது. உன் பொண்ணுக்கு ஏதாவது நடந்துடக்கூடாதுன்னு நீ பயப்படுற மாதிரி, என் பையனால ஏதாவது பொண்ணுக்கு கெட்டது நடந்துடக்கூடாதேன்னு எனக்கும் பயம் இருக்கு.
அப்படி நடந்தா அது என் பையன் வாழ்க்கையையும் பாதிக்கத்தானே செய்யும். நம்ம பிள்ளைங்க கட்டுப்பாடா இருக்க நாமதான் சொல்லித்தரணும். சுதந்திரம்ங்கிறது தனக்குத்தானே முழுக் கட்டுப்பாடோட இருக்கிறதுதான்னு உன் பொண்ணுக்குப் புரிய வெச்சுடு. அப்புறம் உன் பொண்ணு அவசரப்பட்டோ, அறியாமலோ எதுவும் செய்யமாட்டா. எந்தத் தப்புத் தண்டாவும் நடக்காது!”
புவனா சொல்லி முடிக்க, சுமதியின் மனதில் தெளிவு பிறந்தது.