வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

காகித கற்கள்!

ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல், மனுஷனுக்கு ஆரோக்கியம் இல்லன்னா, கட்டின பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா போலிருக்கு...' என்று நினைத்தார் சிங்கார வேலன்.

''ஏங்க... இப்படி பொம்பள மாதிரி சீரியல பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கீங்களே... நீங்க எனக்கு வீட்டு வேலையில, உதவி செய்யக் கூட வேணாம்; ஏதாவது வேலையிருக்கான்னு கேக்குறதாலே, என்ன கொறஞ்சு போயிடுவீங்க,'' என்றாள் மனைவி அருந்ததி.இதற்கு என்ன பதில் சொல்வதென்று, அவருக்கு புரியவில்லை.

காய்கறி வாங்கி வந்தால், 'என்ன இப்படி வாடி வதங்கியிருக்கு...' என்பாள். சரி என்று, அப்போது தான் மார்க்கெட்டில் இறங்கிய காய்கறிகளை வாங்கிட்டுப் போனால், 'இந்த கேரட்டும், கத்திரிக்காயும் தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா... வேற காயே இல்லயா...' என்று சீறுவாள்.

பாரீசில், ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தார் சிங்காரவேலன். அலுவலகம் இரண்டாவது மாடியில் இருந்தது. பழைய கட்டடம்; லிப்ட் கிடையாது. நல்ல மரியாதை, கைநிறைய சம்பளம், நிறைவான வேலை.
அதற்கு ஆட்டோ வடிவில் ஆபத்து வந்தது. ஒரு நாள், பைக்கில் அலுவலகத்திற்கு செல்லும் போது, சிக்னலில் நின்றிருந்தார் சிங்காரவேலன். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ, நிற்காமல் அவரது பைக்கில் மோத, பைக்கோடு சரிந்தார் சிங்காரவேலன். பைக் கால் முட்டியின் மேல் விழுந்ததில், கால்முட்டி எலும்பில் ஜவ்வு கிழிந்தது.

ஒரு வாரம் ஓய்வுக்கு பின், அலுவலகம் போனார். படியேறுவது கஷ்டமாக இருந்தது. வலி ஏற்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு மாத்திரையை போட்டுக் கொள்வார். அப்போதைக்கு ரிலீப் கிடைக்கும்.
இந்த மாத்திரை வைத்தியம், ஆறு மாதங்கள் தான் தாக்கு பிடித்தது. ஒரு நாள் வலி அதிகமாகி, காலை தூக்கினாலே உயிர் போவது போன்று வலித்தது.

அதனால், தனக்கு தெரிந்த ஒரு எலும்பு டாக்டரை பார்க்கப் போனார். முட்டியை தட்டிப் பார்த்த டாக்டர், ஆபரேஷன் செய்ய முடிவு செய்து ஊசி போட்டார்.'சின்ன ஆபரேஷன்... திறந்து பாத்துட்டு வேணுமின்னா பிளேட் வைக்கலாம்; இல்லேன்னா ரெண்டு தையல் மட்டும் போட வேண்டியிருக்கும்....' என்றார்.

ஏதோ ஜிப்பை இழுத்து பையைத் திறப்பது போன்று டாக்டர் சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஊசிப் போடப்பட்டது. உடனே மூளையில், 'கடபுடா'வென சத்தம். கால்கள் இரண்டும் மரத்து, மூச்சு விடுவது கஷ்டமானது.

டாக்டர் டீம் பரபரப்பானது. தப்பான ஊசி மருந்தா இல்லை வேறா காரணமா எதுவென்று தெரியவில்லை. உடனே, ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வரப்பட்டு, மூக்கை முகமூடி வைத்து மூடினர். அதன்பின் அவருக்கு தூக்கம் வந்து விட்டது.

எழுந்து பார்த்தபோது, வெளியே படுக்கையில் படுத்திருந்தார் சிங்கார வேலன்.
'உடம்பக் குறைங்கன்னு சொன்னா கேட்குறீங்களா... இப்போ பாருங்க... மல்லாக்க படுக்க முடியாததினாலே, ஆபரேஷன் இப்ப வேணாம்ன்ட்டார் டாக்டர். ரெண்டு மாசம் மாத்திரை சாப்பிட்டு, நல்லா ஓய்வெடுத்த பின் வரச் சொல்லியிருக்கார்...' என்றாள்.

அலுவலகத்திலும், 'இனிமே உங்களால வண்டி ஓட்ட முடியாது; வேலையையும் சரியாக பாக்க முடியாது...' என்று நாசுக்காக சொல்லி, கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
முதலில், அன்பாகத் தான் நடந்து கொண்டாள் அருந்ததி. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கணவனை பாரமாக நினைக்கத் துவங்கினாள். அவளுடைய வார்த்தைகள் மிளகாய் தூளை தடவியது மாதிரி எரிச்சலூட்டியது.

''இங்க பாரு... உனக்கு உதவி ஏதாவது செய்யலாம்ன்னா, செய்ற வேலையில எல்லாம் குத்தம் கண்டுபிடிச்சிட்டே இருக்குறே... இனிமேலும், என்னாலே உன்கிட்ட திட்டு வாங்கிட்டு இங்க இருக்க முடியாது. எனக்கு அடைக்கலம் கொடுத்து, சாப்பாடு போட்றதுக்கு எத்தனையோ பேர் இருக்காங்க. நான் போறேன்; இனிமே மாசம், ஒரு நாள் தான் வீட்டுக்கு வருவேன்,'' என்றார்.

''நான் என்ன உங்கள முந்தானையிலா முடிஞ்சு வச்சிருக்கேன்... எங்கே வேணா போங்க. ஒருத்தர் நாள் முழுவதும் வீட்லே சும்மாவே உட்கார்ந்திருந்தா கேட்கத் தான் தோணும். 'நம்ம பொண்டாட்டி ஒத்தையா எவ்வளவு நாள்தான் கஷ்டப்படுவா... அவளுக்கும் உணர்ச்சி இருக்கு'ன்னு என்னைக்காவது நினைச்சுருக்கீங்களா... ஆபீஸ் வேலையும், வீட்டு வேலையும் என்னை மூச்சு திணற வைக்கிறது உங்களுக்கு எங்கே புரியும்,'' என்றாள்.

''அப்போ எனக்கு உணர்ச்சிகளே இல்லன்னு சொல்றியா... நானா போய் ஆட்டோவுல விழுந்தேன்; டாக்டர் கிட்டே தப்பான ஊசி போடுங்கன்னு சொன்னேன்; என் நேரம் உன்கிட்ட பேச்சு வாங்கணும்ன்னு இருக்கு. என்னை அன்போடு வச்சி தாங்குறதுக்கு உறவும், நட்பும் இருக்கு. அவங்களும் என்னைக் கூப்பிட்டுக்கிட்டே தான் இருக்காங்க. நான் தான், நீ எப்பவும் ஒரே மாதிரி இருப்பன்னு நினைச்சு தப்பா முடிவு செய்துட்டேன்,'' என்று சொன்னவர், காலை சிறிது இழுத்து இழுத்து வேகமாக தன் அறைக்குச் சென்றவர், ஒரு பெட்டியையும், ஒரு தோள் பையையும் எடுத்தபடி கிளம்பிவிட்டார்.

சிங்காரவேலனின் ஜோக்குகள் பத்திரிகைகளில் அடிக்கடி வரும். அதைப் பார்த்த அவருடைய நண்பரும், சினிமா இயக்குனருமான அதியமான், 'சார்... உங்க திறமைக்கு நீங்க மட்டும் சினிமாவுக்கு வந்தீங்கன்னா சீக்கிரமே பாப்புலர் ஆயிடுவீங்க. எனக்கும் கதை விவாதத்திற்கு, ஒரு ஆள் தேவையாயிருக்கு. எங்க ஆபீசிலேயே தங்கிக்கலாம். தயாரிப்பாளர் நல்லவரு...' என்று, சில ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார்.
அவரை அலைபேசியில் பிடித்தார்.

'சார்... மகாபலிபுரத்தில ஸ்டோரி டிஸ்கஷன்லே இருக்கேன். தயாரிப்பாளரும் இருக்காரு; உடனே பெட்டி, படுக்கையோடு வாங்க,'' என்று கூறியதும், சிங்காரவேலனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு கால் டாக்சி பிடித்து, இரண்டு மணி நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜரானார்.

அறிமுகத்திற்கு பின்னர், ஒரு ஓரமாக உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்றதும், தயாரிப்பாளர் அவரை அழைத்து, ''வேலன்... இன்டர்காம் ஒர்க் செய்யலே... கீழே போயி டீயும், பன்னும் வாங்கிட்டு வாங்க,'' என்று கூறியதும், சிங்கார வேலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நண்பர் ஏதோ எழுதுவதில் மும்முரமாக இருந்தார். ஒன்றும் சொல்லாமல் கீழே வந்தார். பெருத்த அவமானமாக இருந்தது.
தன் அறைக்குச் சென்ற தயாரிப்பாளர், சிறிது நேரம் கழித்து, சிங்காரவேலனைக் கூப்பிட்டனுப்பினார். அவர் ஆர்வமாக சென்றார்.
''உங்க கருத்துகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. இயக்குனர் தம்பி, உங்களப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். ஆனா, இப்போ கதை டிஷ்கஷன்லே நிறைய பேர் இருக்காங்க. இப்போதைக்கு செக்யூரிட்டி வேலை தான் காலியிருக்கு; ஆபீஸ்லேயே உக்கார்ந்திருக்கலாம்; வெளியே நிக்கணும்ன்னு தேவையில்லே. வர்ற போன் கால அட்டென்ட் செய்தா போதும்,'' என்றார்.

அதற்கு பின், அவர் சொன்னது சிங்காரவேலன் காதில் விழவேயில்லை. சூட்கேசை எடுத்துக் கொண்டு அவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்த போது, அதிகாலை, 4:00 மணி!

அடுத்து வந்த பஸ்சில் எதையும் யோசிக்காது ஏறினார். மனம் அவ்வளவு வெறுத்துப் போயிருந்தது. ''மதுரைக்கா?'' என்று நடத்துனர் கேட்க, ''ஆமாம்...'' என்று சொல்லி, டிக்கெட் வாங்கினார்.

மதுரை, எஸ்.எஸ்.காலனியில் இருக்கும் அவர் சித்தப்பா பையன் ராமுவின் வீட்டிற்கு போனார். 'அண்ணே... அண்ணே' என்று உயிரை விடுவான் ராமு. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, ஒரு கட்சியில் சேர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தான். அவனும், அவரை வீட்டுக்கு வரும்படி பலமுறை கேட்டுள்ளான்.
அவரைப் பார்த்ததும் உற்சாகமானான். கட்சியில் இருந்து பலர் வந்து போனபடி இருந்தனர். அவர்களிடம் அவரை அறிமுகப்படுத்தினான்.

''ஆமா... சித்தி எங்கே?''
''அடடே சொல்ல மறந்துட்டேன்... அம்மா ஒரு மாசமா படுத்த படுக்கையிலே இருக்காங்க... அவங்கள பாத்துக்க ஆள் போட்ருக்கேன்; ஆனா, நாம இல்லேன்னா அவங்க, அம்மாவை திட்றாங்க. நீங்க அப்பப்ப போயி, அவங்களை சூபர்வைஸ் செய்யணும்,''என்றான்.

'சரி' என்று தலையாட்டியவர், மாடியில், சித்தியின் அறைக்கு சென்றார். வேலைக்காரப் பெண் சித்தியைத் திட்டுவது நன்றாக கேட்டது. இவர் போனவுடன் பேச்சை மாற்றினாள்.
அறை சுத்தமில்லாமல் இருந்தது. கீழே இருந்த பிளாஸ்டிக் கோப்பையில், மலம் சரியாக கழுவப்படாமல் இருந்ததைப் பார்த்ததும், அவருக்கு குமட்டியது.

சித்தியால், அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. வலியால் முனகிக் கொண்டிருந்தாள். ''என்னம்மா... ரூமை இப்படி சுத்தமில்லாம வச்சிருக்கீங்க...'' என்றார்.
''அவர் கொடுக்கிற சம்பளத்துக்கு, இவ்வளவு தான் சார் செய்ய முடியும்,'' என்று, 'வெடுக்'கென பதில் சொன்னாள் வேலைக்காரப் பெண்.

அடுத்த நாள், இவரே சுத்தப்படுத்தினார். ராத்திரி தூக்கம் வரவில்லை. பழக்கம் இல்லாத வேலை என்பதால் அவருக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒய்வு எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அவருக்கு அறிவுரை கூற, வீட்டிற்கு கிளம்பினார்.
சரியாக நடக்க முடியாமல் அவர் சிரமப்படுவதை பார்த்த ராமு, அவரை வற்புறுத்தவில்லை. 
ரயிலில் வரும்போது யோசித்தபடியே வந்தார்.

'சித்தியால், வசதிகள் இருந்தும் சாப்பிடவோ, நடமாடவோ முடியவில்லை. என் நிலைமை அப்படியில்லை. சித்தியோடு, 'கம்பேர்' செய்யும்போது, நான் எவ்வளவோ மேல். இருப்பதை வைத்து சுகமாக வாழ்வது தானே வாழ்வின் இலக்கணம். மனைவி தானே திட்டுகிறாள்... கோழி மிதித்து, சேவல் முகம் வாடி விடுமா என்ன...' என்று நினைத்து, மனச் சமாதானம் ஆனவருக்கு தூக்கம் வர, சுகமாக நித்திரையில் ஆழ்ந்தார்.

'ஒரு அவசரத்தில் வார்த்தைகளை கொட்டிட்டோமோ...' என்று வருத்தப்பட ஆரம்பித்தாள் அருந்ததி. 'இவருடைய தம்பிகள் ஏனோ தானோவென்று இருக்க, இவர் புத்திசாலித்தனமாக குடும்ப பட்ஜெட் போட்டு, பணம் சேமித்து, பிளாட் விலை கம்மியாக இருக்கும் போதே, எக்மோரில் பிளாட் வாங்கி விட்டார். ஒரே பெண்ணை நல்லா படிக்க வச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தார்.

'அவர் செய்த நல்லவைகளை எல்லாம் ஒரு நொடியில் மறந்துட்டு இப்படி அவர் மனசு புண்படும்படியா பேசிட்டோமே... இப்போது என்ன செய்றது... எங்கே போயிருப்பார்...' என்று பலவாறு நினைத்து வேதனையடைந்தாள் அருந்ததி.

அவருக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு, 'அவர் வந்திருக்கிறாரா...' என்று விசாரித்தாள்.

எங்கேயும் அனுகூலமான பதில் கிடைக்கவில்லை என்றதும் பதற்றமானாள். பெங்களூரில் இருந்த மகளுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

''ஒண்ணும் கவலைப்படாதேம்மா... ரெண்டு நாள்லே திரும்பி வந்துடுவார். உன் சுவையான சமையலைத் தேடியாவது, அவர் வந்தே தான் தீரணும்,'' என்று சமாதானம் சொன்னாள்.

கணவர் எப்போது வருவார் என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் அருந்ததி.

எல்.வி.வாசுதேவ்

No comments:

Post a Comment