ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.
சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.
உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.
சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.
No comments:
Post a Comment