ஆடைகளில் அலட்சியம் வேண்டாம்!
விழாக் காலம் என்றால்… கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.
‘என்ன வாங்க வேண்டும்?’ என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்; எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்; ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்; முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதா, அமர முடிகிறதா, எழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்கு, இடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்… அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.
எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள், ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.
ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விட, உங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.
தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்… உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்… கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் – குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்!
. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.
ஆடைகள் வாங்கும்போது… தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதா, டிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.
நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா..? ‘சரி நம்ம தலையெழுத்து’ என்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும், அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.
உள்ளபடியே தள்ளுபடியா?
கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது ‘தள்ளுபடி’ வாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ… அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப ‘தள்ளுபடி’ பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.
‘ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்… மூன்று துணிகள்… நான்கு துணிகள்’ என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.
‘தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாது’ என்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அது, தரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூட, அதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா… என்றும் முடிவு செய்யுங்கள்.
‘அசத்தலான 50% தள்ளுபடி’ என்றவுடன் உற்சாகமாகி, ‘பாவம், கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்’ என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை, சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.
-
No comments:
Post a Comment